உள்ளாட்சித் தேர்தல் நடத்த அவகாசம் கேட்டது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு 

டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக  அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என். நேரு…

டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக  அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், திமுக அரசு தரம் உயர்த்தி உள்ளதால் வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறினார்.

இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், முதலமைச்சர் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க அறிவுறுத்தி உள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர்,  “மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தான் பணி நியமனம் செய்கிறோம். எனினும் அரசின் நிதி நிலைமையைக் கணக்கில் கொண்டு அவர்களுக்குத் தேவையானதை செய்ய தமிழக முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாதங்கள் அவகாசம் வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.