முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

மௌனசாமியான ரங்கசாமி ஜெயிப்பாரா?


தங்கபாண்டியன்.ரா

கட்டுரையாளர்

தேர்தல் முடிவு வெளியாகி ஒரு மாதம் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் புதுச்சேரியில் மட்டும் இன்னும் புதிய அரசு முழுமையாகப் பொறுப்பேற்க வில்லை… என்னதான் நடக்கிறது புதுச்சேரியில்? புரியாத புதிரா புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி… வாருங்கள் பார்க்கலாம்…

புதுச்சேரியில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன. இக்கூட்டணி சார்பில் என்.ரங்கசாமி முதலமைச்சராக கடந்த 7 ஆம் தேதி பதவியேற்றார்.

பாஜகவின் பலம்

சொந்த கட்சியினர் மட்டுமின்றி,கூட்டணிக் கட்சியான பாஜக சார்பிலும் யாரும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவில்லை. இதற்கு காரணம், கூட்டணி கட்சியான பாஜக அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்தும் கோரியது இதற்கு இடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ரங்கசாமி மருத்துவ சிகிச்சைக்கு சென்ற நேரத்தில், பாஜகவை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக மத்திய அரசு நியமித்தது.

மேலும் சுயேட்சை எம்எல்ஏக்கள் மூன்று பேரின் ஆதரவைப் பெற்று சட்டப்பேரவையில் தனது பலத்தை 12 ஆக உயர்த்திக் கொண்டது பாஜக. இந்த புதிய பலத்தைக் காட்டி, பாஜகவுக்கு துணை முதலமைச்சர் உட்பட மூன்று அமைச்சர்கள், பேரவைத்தலைவர் பதவி என முக்கிய பொறுப்புகளை கோருகிறது பாஜக..!

இன்னும் 3 ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கும் என்பதால் அந்த கட்சியைப் பகைத்துக்கொண்டால் கடந்த ஆட்சியைப் போல மக்கள் நலத்திட்டங்களை புதிய அரசால் நிறைவேற்ற முடியாமல் போகும். இதன் காரணமாக பாஜகவை நேரடியாக எதிர்க்கவும் முடியாமல், அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவும் முடியாமல் திகைத்து வருகிறார் ரங்கசாமி. இதனால் ஓராசிரியர் பள்ளிக்கூடம் போல், முதலமைச்சர் மட்டுமே உள்ள அமைச்சரவையாக உள்ளது புதுச்சேரி அமைச்சரவை.

மருத்துவ சிகிச்சை முடிந்து ரங்கசாமி வீடு திரும்பியதும், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி 3 வாரங்களுக்கு பிறகே நடந்தேறியது. தற்போது தான் அமைச்சரவை மற்றும் அதிகாரப்பகிர்வு பற்றி என் ஆர். காங்கிரசும், பாஜகவும் தீவிரமாக கலந்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது.

செயலாற்றவேண்டிய நேரம் இது

கொரோனாவைத் தடுக்க, மக்கள் பிரதிநிதிகள் கறமிறங்கி செயலாற்ற வேண்டிய நேரத்தில் புதிய அரசு செயலற்று இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. துணைநிலை ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் அதிகார மோதல் நேரடியாக தொடங்கவில்லை என்றாலும் 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் அதை மறைமுகமாக தொடங்கிவைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

கொரோனா நிவாரண நிதி ரூ. 3000 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரண திட்டங்கள் போன்ற முக்கிய திட்டங்களை மட்டுமே முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுத்துகிறார். இதர திட்டங்கள் மெதுவாகவே செயல்பாட்டுக்கு வருகின்றன.

பாஜக கேட்கும் பதவிகளை விட்டுக்கொடுத்துவிட்டால், ஆட்சியையும், கட்சியையும் பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி விடும் என நினைப்பதால், முதலமைச்சர் ரங்கசாமி மவுனம் காத்து வருகிறார். இந்த மவுனம் பாஜவை வழிக்கு கொண்டு வர வைக்கும் முயற்சியே என என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றி, திமுக வின் 6 உறுப்பினர்கள், காங்கிரசின் 2 உறுப்பினர்கள், சில சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியை தொடர்ந்தாலும், புதுச்சேரியின் நிதி தேவையை பூர்த்தி செய்ய மத்திய பாஜக அரசின் உதவி தேவை. பாஜகவை பகைத்துக்கொண்டால், மத்திய பாஜக அரசு, என்.ஆர். காங்கிரஸ் அரசுக்கு உதவுமா அல்லது கடந்த காங்கிரஸ் ஆட்சி போல இந்த ஆட்சியும் மாறிவிடுமோ என்ற அச்சமும் என்.ஆர்.காங்கிரசுக்கு இருக்கிறது.

இதனால் மவுனசாமியாராக மாறியிருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியின் பொறுமைக்கு வெற்றி கிடைக்குமா? பாஜகவை சரியாகக் கையாண்டு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வாரா என்ற கேள்வி எழுகிறது. எது எப்படியோ, 5 ஆண்டுகளாக மத்திய அரசின் கருணைப் பார்வையின்றி பரிதவிக்கும் புதுச்சேரி மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்.

Advertisement:

Related posts

”புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு தடையில்லை”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Jayapriya

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து

Gayathri Venkatesan

பட்ஜெட் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கருத்து!

Niruban Chakkaaravarthi