வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய நாசாவின் ஆர்டெமிஸ் குழு!

நிலவை ஆய்வு செய்த நாசாவின் ஆர்டெமிஸ் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (நாசா), நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது. இதனிடையே கடந்த 2ம் தேதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவை சுற்றி ஆய்வு செய்த நிலையில் மேலும் நிலவின் மறுபக்கத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற சாதனையையும் படைத்தனர்.

ஆய்வுகளை முடித்து கொண்டு ஓரியன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களும் பூமியை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் பயணிக்கும் ஒரியன் விண்கலம் இன்று காலை 5.37 மணியளவில் பூமிக்கு வந்தடைந்தது. நிலவை ஆராய்ந்த 4 விண்வெளி வீரர்களும், 3 பாராசூட் உதவியுடன், அமெரிக்காவின் சான் டீகோ நகர் அருகே பசிபிக் கடலில் வந்திறங்கினர்.

பூமியில் இருந்து 4 லட்சத்து 6 ஆயிரத்து 770 கி.மீ. தொலைவை இந்த ஒரியன் விண்கலம் சென்றடைந்து விட்டு, பூமிக்கு திரும்பியுள்ளது. மொத்தம் 11 லட்சத்து 2 ஆயிரத்து 398 கி.மீ. தொலைவுக்கு விண்கலம் பயணித்து உள்ளது. அப்போலோ 13-ன் 2 லட்சத்து 48 ஆயிரத்து 655 மைல் பயணம் என்ற சாதனையை இது முறியடித்து உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.