மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதை ராகுல் காந்தி தவிர்க்க வேண்டுமென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலையில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா குறித்த தீவிரத்தை பிரதமர் மோடி உணரவில்லை என்றும், கொரோனா 2ம் அலையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பிரதமர் ஒருவரே காரணம் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். தடுப்பூசி தொடர்பாகவும் விமர்சித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ராகுலுக்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து உணர்ந்துள்ள ராகுல் தடுப்பூசி அறிமுகப்படுத்தியபோது அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய ஜவடேகர், “பிரதமர் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோதும் உங்கள் விமர்சனத்தை நீங்கள் நிறுத்தவில்லை. மக்களின் மனதில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள். வரும் டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு கிடைக்கும். அப்போது 108 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்படும்” என பதிலளித்தார்.
உலக அளவில் தடுப்பூசி செலுத்தும் நாடுகளிடையே மக்களுக்கு வேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடு இந்தியா என சுட்டிக்காட்டிய அவர், “ மக்களை பயமுறுத்துபவராக ராகுல் திகழ வேண்டாம், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தடுப்பூசி குழப்ப நிலையில் உள்ளது. 18-44 வயதுடையோருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி தொகுப்பை முறையாக பயன்படுத்தவில்லை” எனவும் குற்றம்சாட்டினார்.