#Puducherry | திரையரங்குகளில் இன்று அனைத்து காட்சிகளும் ரத்து!

கனமழை காரணமாக புதுச்சேரி திரையரங்குகளில் இன்று (டிச.1) அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு…

கனமழை காரணமாக புதுச்சேரி திரையரங்குகளில் இன்று (டிச.1) அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதற்கிடையே, ஃபெஞ்சல் புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்த பிறகும் புதுச்சேரியில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் 47 செ.மீ. மழை பொழிந்துள்ளதாக கூறப்படுகிறது. 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் மழை கொட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழையால் புதுச்சேரியில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி திரையரங்குகளில் இன்று (டிச.1) அனைத்து காட்சிகளையும் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் புதுச்சேரி தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதுச்சேரி திரையரங்குகளில் நேற்று (நவ.30) மாலை மற்றும் இரவு காட்சிகளை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.