மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.56 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் கொரோனா தொற்று வேகமெடுத்திருக்கும் நிலையில், வருகிற 24ஆம் தேதி இரவு முதல் 26 ஆம் தேதி காலை வரை, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும், என துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மற்ற மாநிலங்களை விட புதுச்சேரியில் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும் புதுச்சேரியில் போதுமான அளவில் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.







