இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும் இடத்தை அளவீடு செய்யாத அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மேட்டுப்பாளையம் அருகே இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும்  இடத்தை அளவீடு செய்து கொடுக்காத வருவாய் துறை அதிகாரிகளைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள…

மேட்டுப்பாளையம் அருகே இலவச பட்டா வழங்கி 10 ஆண்டுகள் ஆகியும்  இடத்தை அளவீடு செய்து கொடுக்காத வருவாய் துறை அதிகாரிகளைக் கண்டித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம்  கட்டாஞ்சிமலை அடிவாரத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தினை கடந்த 2013 ஆம் ஆண்டு வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு அப்போதைய அ.தி.மு.க அரசு சார்பில் இரண்டு பிரிவுகளாக சுமார் 320 பேருக்கு இலவச பட்டா வழங்கபட்டுள்ளது. இருப்பினும், பட்டா வழங்கபட்ட பயனாளிகளுக்கு இதுவரை நிலத்தை அளவீடு செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த இடத்தின் அருகே அண்மையில் வேறு ஒன்பது பயனாளிகளுக்கு பட்டா வழங்கபட்டதையடுத்து, அவர்களுக்கு நிலத்தை அளவீடு செய்ய நில அளவையர்கள் வந்ததை அறிந்த பொதுமக்கள், அவர்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே 2013 ஆண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து தந்த பிறகு, தற்போது வழங்கிய பட்டாவிற்கு இடத்தை அளந்து தர வலியுறுத்தி  பட்டா பெற்ற மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பத்தாண்டுகளாக காத்திருக்கும் தங்களுக்கு இதுவரை நிலத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் அதிகாரிகள், இந்த ஒன்பது பேருக்கு மட்டும் சிபாரிசு காரணமாக நிலத்தை அளவீடு செய்வதாகக்கூறி, சர்வே செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அரசு வாகனத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தியதுடன், அங்கேயே தங்களுக்கு வழங்கபட்ட பட்டவுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் கோவை வடக்கு வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு வந்து போராட்டதாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், இன்னும் இரு மாதங்களில் அனைவருக்கும் நிலத்தை அளவீடு செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து  சென்றனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.