காரைக்காலில் கழிவுநீர் வடிகாலை பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கையால் அள்ளும் தூய்மைப்பணியாளர்கள் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருமலைராயன் பட்டினம், கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் காரைக்கால் நகராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்தில் பணியாற்றும் ஊழியர்கள், திருநள்ளாறு காரைக்கால் சாலையில் உள்ள கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கழிவு நீர் வடிகாலில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள்
கையுறை, முக கவசம், பாதுகாப்பு காலனி உள்ளிட்ட எந்த பாதுகாப்பு அம்சமும்
இன்றி, வெறும் கையுடன் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கழிவு
நீர் மற்றும் குப்பைகளை கையால் சுத்தம் செய்து, அதனை கழிவு நீர் வடிகாலில்
இருந்து வெளியே எடுத்து சுத்தம் செய்து வருகின்றனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன் திரைப்படத்தில்
பேசிய, ‘இவர்களும் மனிதர்கள் தானே இவர்களைப் பார்த்து பரிதாபப்பட
சொல்லவில்லை, அவருக்கு உண்டான நியாயம் கிடைக்க வேண்டும்’ என்ற
வசனத்தை நெட்டிசன்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.
கு. பாலமுருகன்








