தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதிதாக களம் இறங்கிய தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்து முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி அதிமுக கட்சி 3-வது இடத்தை பிடித்ததால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் சட்டசபையில் இழந்தது. இதன் காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்திக்குள்ளானதாக தகவல் பரவியது. இதனால் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் ஓர் அணியும், ஈபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்து மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தின. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது, “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதனை முழுமையாக ஒத்துக்கொள்கிறோம். இந்தக் கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. இன்றைக்கு அதிமுக என்ன செய்யப்போகிறது. இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், நிலைநிறுத்தப்பட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மற்றும் விஜய் ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது.
இந்த நிலையில் அதிமுக கலந்தாலோசிக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில யோசனைகளை முன்வைத்தார். இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது திமுகவை எதிர்த்துதான். எந்த திமுகவை எதிர்த்தோமோ அந்த திமுக ஆதரவோடு என்னை முதல்வராக தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்டார்கள் என ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். திமுகவோடு இணைந்தால் அதிமுக இல்லாமல் போய்விடும், இது தவறு என்றோம். அதனை இபிஎஸ் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
அதனால் பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதன்படி தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இப்போது இல்லை. மக்கள் தீர்ப்பை ஏற்று இன்று வெற்றிபெற்று முதலமைச்சராக உள்ள விஜய்யின் தவெக ஆட்சியை ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அதிமுக சட்டமன்ற குழுவின் தலைவராக எஸ்பி வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனை பொதுச் செயலாளரிடம் கூறியுள்ளோம். விரைவில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் கோரிக்கை வைக்கிறோம். கட்சியை மேம்படுத்த இபிஎஸ் விரைவில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவார் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.







