நாங்குநேரியில் விதிமுறைகளை பின்பற்றாத அரசு பேருந்துகளை கட்டுப்படுத்த கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் அரசு அனுமதியின்றி இடைநில்லா பேருந்துகளாக புறவழிச்சாலையில் இயங்கி வருவதாக புகார் கூறப்படுகிறது. அதுபோலவே, நெல்லையிலிருந்து நாங்குநேரி வழியாக திசையன்விளை செல்லும் அரசு பேருந்துகளும் புறவழிச் சாலையில் இயங்கி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கிடையே, நாங்குநேரியில் ஊருக்குள் வராமல் சட்ட விரோதமாக புறவழிச்சாலை வழியாக செல்லும் அரசு பேருந்துகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர் சங்கத்தினர் நாங்குநேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சௌம்யா.மோ







