அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிரா அரசை வலுப்படுத்தும் – முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேட்டி..!!

அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிரா அரசை வலுப்படுத்தும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி…

அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிரா அரசை வலுப்படுத்தும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் மூத்த அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏ-க்களை, தன் பக்கம் இழுத்து, பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

இதனையடுத்து மகாராஷ்ட்ராவின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதேபோல மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்பட்டது. அஜித்பவார் பாஜகவில் இணையவுள்ளதாகவும் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. சரத்பவாரின் இந்த அறிவிப்பை கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 10ம் தேதி  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் சரத் பவார் கட்சியின் புதிய செயல் தலைவர்களாக சுப்ரியா சூலே மற்றும் ஃபிரபுல் படேல் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். அக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித் பவாருக்கு எந்த பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 30பேரை அழைத்துக் கொண்டு பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா தலைமையிலான கூட்டனியில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து மகராஷ்ட்ரா மாநில அரசின் துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்டார்.  மேலும் அவரது ஆதரவாளர்கள் 8பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஜித் பவார் தங்களது கூட்டணி அரசில் இணைந்தது குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்ததாவது..

“ மகாராஷ்டிராவிற்கு தற்போது ஒரு முதலமைச்சரும் இரண்டு துணை முதலமைச்சர்களும் உள்ளோம். இரண்டு இயந்திரங்களை கொண்டு இயங்கிய அரசு, தற்போது 3 இயந்திரங்களை கொண்டு இயங்க உள்ளது.

மகராஷ்டிராவின் வளர்ச்சிக்காக அஜித் பவாரையும், அவரது ஆதரவாளர்களையும் வரவேற்கிறேன். அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிரா அரசை வலுப்படுத்தும்” என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.