இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பருடன் சாட்டிங் செய்வது போன்று அவரின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக கேக் தயாரித்து வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டங்களில் ஒவ்வொருவரின் விடியலும் அதாவது காலை பொழுதும் ஆரம்பிப்பதே ஸ்மார்ட் போனில் தான். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை சமூகவலைதளங்களை பார்ப்பது, போனில் தகவல்களை தேடுவது, ரீல்ஸ், நண்பர்களுடன் சாட்டிங் செய்வது என்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் ஸ்மார்ட்போனும், கையுமாக எப்போதும் பிஸியாகவே இருக்கும் நண்பர் ஒருவருக்கு, பிறந்தநாள் பரிசாக இன்ஸ்டா சாட் வடிவிலேயே வித்தியாசமாக கேக் செய்து அவரது நண்பர்கள் அசத்தி உள்ளனர்.
பாப்லோ ரோசாட் என்பவர், சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பரின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக கேக் தயாரித்து வெட்டுவது போன்ற வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் பிறந்த நாள் கொண்டாடும் தனது நண்பருக்கு ரோசாட் வாழ்த்து கூறுகிறார். அதற்கு அவர் நன்றி தெரிவிக்கிறார். பிறகு உனக்காக பிரத்யேகமாக ஒரு கேக் தயாரித்திருக்கிறோம். உனக்கு நிச்சயம் பிடிக்கும் என்று கூறும் போது, அவர் பதிலுக்கு அப்படியா என்று ஆச்சர்யமுடனும், ஆர்வதத்துடனும் கேட்கிறார். இப்படி சிறிய சாட்டிங்கில் ஆரம்பித்து வீடியோவிலேயே கேக்கை வெட்டி நண்பருக்கு எடுத்து காண்பிக்கின்றனர்.
அப்போது அந்த கேக்கை பார்த்தல், உள்ளே இருக்கும் அடுக்குகள் ரோசாட் மற்றும் அவரது நண்பருக்கு இடையேயான உரையாடலை பிரதிபலிப்பது போன்று உள்ளன. அவர்களின் உரையாடலில் இருந்ததைப் போலவே கேக்கின் அடுக்குகளுக்கு இடையில் ஒரு சிறிய இதயம் போன்ற நுணுக்கமான விவரங்கள் உள்ளன. இது தவிர கேக் வெட்டும் போது வீடியோவின் பின்னணியில், Happy Birthday to You என்ற பாடல் ஒழிக்கிறது. இந்த வித்தியாசமான வீடியோ பகிரப்பட்டதில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளுடன், 1 கோடி பார்வைகளுடன் தற்போது வைரலாகி வருகிறது.
வித்தியாசமான கேக்கை உருவாக்கிய திறமையை பார்த்து வியப்பதாகவும், கேக்கின் வடிவமைப்பை கண்டு ஆச்சர்யபடுவதாகவும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பயனர் ஒருவர், லவ் எ பர்த்டே சர்ப்ரைஸ்” என்று கூறி கேக் ஈமோஜி போட்டிருந்தார். மற்றொரு நபர், “தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் அருமையாக இருக்கிறது, எந்த இடத்தில் துண்டு வந்தாலும், வடிவமைப்பு அப்படியே இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








