பள்ளிகளில் இனி தினந்தோறும் PT வகுப்பு – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

பள்ளிக் குழந்தைகள் தவறான பாதையில் செல்வதை தடுக்கும் வகையில் தினந்தோறும் PT வகுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் கேல்விகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதிலுரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “எதிரில் அமர்ந்திருந்தாலும் எதிரிகளாக பார்க்காமல் நாங்கள் ஏதேனும் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஆவரேஜ் மாணவர் என்று குழந்தைகளை சொல்லக்கூடாது, அதற்கேற்றவாரு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு மாற்றம் போல் இருப்பார்கள். அவர்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். எனக்கு தமிழ் சிறப்பாக வரும் ஆனால் கணிதம் வராது. குழந்தைகளுக்கு புரியாத பாடங்களை கதையாக சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு குழந்தை வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை குற்றவாளியாக பார்க்க கூடாது. தவறான பாதையில் செல்லாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு PT வகுப்பை அதிகரிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு PET வகுப்பு கொண்டுவர வேண்டுமென இந்த அரசு தீர்மானம் எடுத்துள்ளது.

பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் பொழுது தங்களது குழந்தை வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் ஆசிரியர்கள் அனைத்து பிள்ளைகளும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். நிதி பிரச்சனை நிர்வாக பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகள் இந்த பள்ளிக்கல்வித்துறையில் உள்ளது. உயர்மட்ட குழு தொடங்கி பள்ளிக்கல்வித்துறையின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த குறைகளுக்கு கண்டிப்பாக நான் பதில் அளிக்கிறேன்.

PT பணியிடங்கள் தேர்வானையம் மூலம் உடனடியாக நிறப்பப்படும். ஒரு அரசு பள்ளியில் கூட மூடமாட்டோம், 10 குழந்தைகள் இருந்தால் கூட அந்த பள்ளிகள் தொடரும். வெளிப்படையான நிர்வாக திறனை கொண்டு வர வேண்டும் என்பது தான் நோக்கம். கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.” என்றார்

இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். அவை பின்வறுமாரு,

மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்ந்து, விளையாட்டில் ஆர்வத்தை ஊக்குவிக்க ‘ஓடி விளையாடு’ (PLAY) முன்னெடுப்பின் கீழ் விளையாட்டு, கலை மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகளுக்காக தினமும் ஒரு பிரிவேளை ஒதுக்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 23.40 இலட்சம் மாணவர்களுக்கு ரூ.81.89 கோடியில் புதிய விளையாட்டு உடை அடுத்த கல்வியாண்டு முதல் வழங்கப்படும்.

வாசிப்பை நேசித்து அறிவை சுவாசிக்க அரசு மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு நாளிதழ்களும் பொது நூலகங்களிலிருந்து நூல்களும் தொடர்ந்து வழங்க “வாசிப்பை நேசிப்போம்” திட்டம் ரூ. 1.45 கோடியில் செயல்படுத்தப்படும். நடுநிலைப் பள்ளிகளுக்கு 150 சிறார் நூல்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 200 நூல்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் வழங்கப்படும்.

ஒவ்வொரு புன்னகையையும் பார்வையையும் ஆரோக்கியமாக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு பல், கண் மற்றும் காது பரிசோதனைகள் அரசு, தனியார் மற்றும் பெருநிறுவன மருத்துவமனைகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும். உரிய சிகிச்சை, ஆலோசனை மற்றும் தொடர் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்படும்.

காலியாக உள்ள 1,443 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 1,328 பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உடனடியாக நிரப்பப்படும்.

தனியார் பள்ளிகளில் அதிக கல்விக் கட்டணம் குறித்து புகார் தெரிவிக்க 14417 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும். உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.