‘ரூ.1,000 கோடியில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்’ – அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு!

உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடியில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் கேல்விகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “59-ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். துணைவேந்தர் நியமனம் குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு விரைவில் பதிலளிப்பேன். இதுகுறித்து குறித்து முதலமைச்சரை அறிவிப்பார்” என்றார்

இதனைத்தொடர்ந்து உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களைகளை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார். அதன்படி,

“ரூ.1,000 கோடியில் பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம். 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் அரசு உயர்கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் (நிலை -2)’ அறிமுகப்படுத்தப்படும்.

புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை
தமிழ்நாட்டை அறிவுசார் பொருளாதாரமாக மாற்றுதல், வளங்களை ஒருங்கிணைத்தல், உள்ளூர் புதுமைகளை வலுப்படுத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் முதலீட்டை அதிகரித்தல், அறிவுசார் சொத்துரிமையை வலுப்படுத்தல் (IPR) மற்றும் அறிவியல்-தொழில்நுட்பத்தின் பயன்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஓர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை (Tamil Nadu Science and Technology Policy) உருவாக்கப்படும்.

ஆராய்ச்சி மாணவர்களுக்கான நிதியுதவி
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயின்று, அடிப்படை அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்து, முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதி, உணவு மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6,000 உதவி பேராசிரியர்கள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் 6,000 உதவி பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றி விரைந்து நியமிக்கப்படுவர். உயர்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மேம்படுத்தப்படும்.

கௌரவ விரிவுரையாளர்களுக்கான மாதாந்திர ஊதியம் உயர்வு
அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 30,000-லிருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 25,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்படும்.

கல்வி உத்தரவாதத் திட்டம்
2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர் தடையின்றிப்
படிக்க ரூ.20 இலட்சம் வரை பிணையில்லா கல்விக் கடன் வழங்க புதிய “கல்வி உத்தரவாதத் திட்டம்” (Education Guarantee Scheme) அறிமுகப்படுத்தப்படும்.

10 அரசு கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாகத் தரம் உயர்வு
2026-2027-கல்வியாண்டில் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி (Autonomous) கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்படும். தேர்வு செய்யப்படும் 10 கல்லூரிகளின்
கட்டமைப்பு வசதிகள் ரூ. 20 கோடியில் மேம்படுத்தப்படும்.

6 அரசு கலை மற்றும் அறிவியல் தரம் உயர்வு கல்லூரிகள்
2026-2027-ஆம் கல்வியாண்டில் கூடலூர், சிவகாசி, ஒரத்தநாடு மற்றும் நாமக்கல் ஆகிய 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிலை-2-லிருந்து நிலை-1-ஆக (Grade 2 to Grade 1) தரம் உயர்த்தப்படும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று, அரசு கல்லூரிகளில் சேரும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணாக்கர்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கும் முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படும்” உள்ளிட்ட பல்வேறு தொட்டங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.