சுயநலவாதிகளின் தூண்டுதலின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டு, மெரினா இணைப்பு சாலையில் போக்குவரத்தை முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதி மீனவர்கள் மீன் கடைகள் அமைத்துள்ளதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லூப் சாலையின் மேற்குபகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும், அங்குள்ள உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மீனவர்கள் தரப்பில் வழக்கில் தங்களையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. லூப் சாலை பொது சாலையல்ல என்றும், மீனவர்கள் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது எனவும், சாந்தோம் சாலை விரிவாக்கம் செய்யும் வரை மட்டும் தற்காலிகமாக லூப் சாலை போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது எனவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், லூப் சாலை விரிவாக்கம் செய்யக் கூடாது; நடைபாதைகள் அமைக்க கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவையும் மீறி, மாநகராட்சி இந்த சாலையை விரிவுபடுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மாநகராட்சி தரப்பில், மீன் விற்பனையை முறைப்படுத்தக் கோரியே இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது எனவும், மாநகராட்சி முறைப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடற்கரையை ஒட்டிய மீன்கடைகளுக்கு வருவோரின் வாகனங்களை கலங்கரை விளக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள இடங்களில் மட்டும் நிறுத்தும்படி காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின் கடந்த ஒரு வாரமாக லூப் சாலையில் சில சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, சாலையில் போக்குவரத்தை முடக்கியுள்ளதாகவும், இதை சகித்துக் கொள்ள முடியாது என தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தை மீறும் வகையிலும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தும்படி, மீனவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், மீனவர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளார்கள் எனவும், இரு புறமும் ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்கள் இயக்க முடியவில்லை எனவும் கூறிய நீதிபதிகள், சாலையை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிவித்தனர்.
லூப் சாலை நடைபாதையில் உணவகங்கள் அதிகரித்துள்ளன எனவும், நடைபாதையில் உணவு சமைக்கப்படுவதை தடுப்பது மாநகராட்சியின் கடமை இல்லையா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சாலையை சமையலறையாக பயன்படுத்துகின்றனர் எனவும், சாலையில் 15 அடி வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, சாலையின் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து சாலை வரையுள்ள பகுதியில் மீன் கடைகள் அமைக்க மாநகராட்சி தரப்பில் கோரிய அனுமதி குறித்து மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.








