பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டிற்கு ஐந்து நாட்கள் செல்ல இருப்பது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கக்கூடிய முன்னோடி நாடாக ஜப்பான் நாடு உள்ளது. இந்நிலையில் ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை குறித்து நேரடியாக சென்று சுகாதாரத் துறையினரிடம் ஆய்வு செய்ய உள்ளோம். ஜப்பான் கூட்டுறவு முகமை, புற்றுநோய் சிகிச்சை குறித்து அறிய எங்களை அழைத்துள்ளது. நாளை அதிகாலை நானும், அரசு முதன்மைச் செயலாளர், உள்ளிட்ட பல அதிகாரிகளும் ஜப்பான் நாட்டிற்கு செல்ல உள்ளோம். இந்த பயணம் 5 நாட்கள் மேற்கொள்ள உள்ளோம்.
ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றிக்கு நிதி உதவி அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 15வது நிதி ஆணையத்தின் கீழ் 800 கோடி அளவிற்கு திட்ட மதிப்புகள் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று நிதி அமைச்சரை சந்தித்தபோது, அவர் ரூ.86 கோடி வழங்கினார்.
மதுரை, கீழ்பாக்கம், கோவை உள்ளிட்ட இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்களை கட்டுவதற்கும், ஜப்பான் கூட்டுறவு முகமையின் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு கடன் பெறப்பட்டுள்ளது. 1,387 கோடி டைக்கா அமைப்பிடம் கடன் வாங்கி பணிகள் நடைபெற்று
வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில், மதுரை எய்ம்ஸ் மட்டும் ஜப்பான் கூட்டுறவு நிதியில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு இன்று கல்வி, மருத்துவம், தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் முதன்மையாக விளங்க கருணாநிதியின் பங்கு முக்கியமானது. அதனால் அவரின் நினைவாக பேனா சின்னத்தை கடலில் வைப்பதில் தவறில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்ற ஒன்றாகவே கருதுகிறேன். மீனவ மக்கள் யாரும் பேனா சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடலில் மண் மற்றும் கற்களை நிரப்பி பேனா சின்னம் அமைக்கப்படவுள்ளது. ஆனால் கடலையே ஆக்கிரமிப்பது போல தவறான செய்தியை பேசுகிறார்கள்.
ஒரு நினைவு சின்னத்தை அமைப்பதன்மூலம், எதிர்ப்பவர்களின் வன்மத்தை காட்டுகிறது. மீனவர்களுக்காக கடலில் தூண்டில் வளைவு மற்றும் சிறு துறைமுகங்கள் அமைக்கும் போது கடலில் ஆக்கிரமித்து தான் கட்டுகிறோம். அப்போதெல்லாம் கடல் பாதிக்கப்பட்டுள்ளது என்று எந்த மீனவரும் குறை சொல்லவில்லை. ஆனால் இந்த சின்னம் அமைப்பதற்காக, அரசியல் காரணங்களுக்காகவே அதை எதிர்க்கிறார்கள்”








