சென்னையில் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்க 50 இடங்களில் அதிநவீன 200
ஏஎன்பிஆர் கேமரா பொருத்த சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.
சென்னையில் பெரும்பாலும் நடைபெறும் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு,
பணத்திற்கான கொலை, மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு, திருட்டு வாகனங்களையே குற்றவாளிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை கைது செய்யும் போது திருட்டு வாகனம் என்பது பறிமுதல் செய்யப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 1,420 வாகனங்கள் திருடு போவதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் வாகனங்கள் திருடு போவதை தடுக்கவும், திருடப்பட்ட வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்கவும், சென்னை காவல்துறை புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில் TROZ எனப்படும் போக்குவரத்து முறைப்படுத்துதல் கண்காணிப்பு மண்டல திட்டம் அடிப்படையில் 200 அதிநவீன ஏ என் பி ஆர் கேமராவை சென்னை முழுவதும் 50 இடங்களில் பொருத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
இதற்கான டெண்டர்கள் விரைவில் இறுதி செய்யப்பட்டு சென்னையில் பொருத்தும் பணி நடைபெற இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏற்கனவே 16 இடங்களில் பொருத்தப்பட்ட ஏஎன்பிஆர் கேமராக்கள் 2018- 19
காலகட்டத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன எண்களை படம் பிடித்து
வைத்திருக்கும். அதன்பின் அந்த வாகன எண்களுக்கு காவல்துறையினர் அபராதம்
விதித்து சலான் அனுப்பி வைப்பார்கள்.
அதனை மேலும் நவீனப்படுத்தி ஏ என் பி ஆர் கேமராக்களில் மத்திய அரசின் நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை “வாகன்” தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படுவதால் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன எண்களை அடையாளம் கண்டுபிடித்து தானாகவே இ சலான் உருவாக்கி சம்பந்தப்பட்ட வாகன
ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அபராதம் விதிக்கும் நடைமுறை செயல்பட்டு
வருகிறது.
இந்த ஏ.என்.பி.ஆர் கேமராக்களை மேலும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தி
திருட்டு வாகனங்களை கண்டுபிடித்து அது செல்லும் பாதையை பதிவு செய்து
காவல்துறையினருக்கு எச்சரிக்கும் விதமாக மேம்படுத்தப்பட உள்ளதாக சென்னை
காவல்துறை தெரிவித்துள்ளது.IVMS எனப்படும் இன்டெலிஜென்ஸ் வீடியோ மேனேஜ்மென்ட் சிஸ்டம் தொழில்நுட்பத்தை ஏ.என்.பி.ஆர் கேமராக்களுடன் இணைத்து பயன்படுத்தபடும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் திருடப்பட்ட வாகன எண்களை அதிநவீன இந்த கேமராக்களில் பதிவேற்றம் செய்தவுடன், இந்த ஏ.என்.பி.ஆர் கேமராக்களில் திருட்டு வாகனங்கள் ஓட்டிச் செல்லப்பட்டால் உடனடியாக புகைப்படம் பிடித்து அது செல்லும் பாதையை கண்காணிக்க ஆரம்பித்து விடும்.
கேமராவில் சிக்கிய திருட்டு வாகனம் தொடர்பாக அருகில் இருக்கும் ஆய்வாளர்
மற்றும் அதற்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும், காவல் நிலையங்களுக்கும்
வாட்சப் குறுஞ்செய்தி மற்றும் தானாக செல்போன் அழைப்பு மூலம்
தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் வாகன திருட்டும் மற்றும் திருட்டு வாகனங்களை பயன்படுத்தி நடைபெறும் பெரும்பாலான குற்றங்களை குறைக்க உதவும் எனவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.