இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், திடீரென மாளிகைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை நீண்ட காலமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராஜபக்ச குடும்பமே இதற்குக் காரணம் என கருதும் பொதுமக்கள், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சவும், அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.
ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்று ஏறக்குறைய 2 மாதங்கள் ஆனபோதிலும், நிலைமை இன்னும் சீரடையவில்லை. மாறாக, மேலும் மோசடைந்து வருகிறது.
பால், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கும், மருந்துப் பொருட்களுக்கும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களுக்கும் ஏற்பட்ட தட்டுப்பாடு கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இதை கண்டிக்கும் வகையிலும், இலங்கையின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறிய கோத்தபய ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதை அடுத்து, அவர்கள் உள்ளே சென்றுவிடாமல் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். எனினும், போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை சூறையாடியதாகக் கூறப்படுகிறது. போராட்டக்காரர்களில் பலர் அதிபர் மாளிகையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சுற்றிப் பார்த்துள்ளனர். அதோடு, அங்கிருந்த நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்ந்தனர்.
இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச தலைமறைவாகி உள்ளார்.
இதனால், இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.













