இலங்கைக்குத் தேவை ரூ.1.80 லட்சம் கோடி: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால் அடுத்த 6 மாதங்களில் ரூ.1.80 லட்சம் கோடி தேவை என்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு இலங்கை…

இலங்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால் அடுத்த 6 மாதங்களில் ரூ.1.80 லட்சம் கோடி தேவை என்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு போதுமான அளவு இல்லாததால், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் அந்நாடு பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால், அந்நாட்டில் பல்வேறு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு – இலங்கை மதிப்பில் ரூ.1.80 லட்சம் கோடி – நிதி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். இதில், 3.5 பில்லியன் டாலர் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கே தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார ஸ்திரத்தன்மை மட்டும் போதுமானது அல்ல என தெரிவித்துள்ள அவர், ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பையும் மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.