தமிழ்நாடு விவசாயி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நிலையிலேயே, நிபந்தனைகளுடன் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முத்தரசன் பேசியதாவது: டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை தயாராக இருக்கும் நிலையில், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 22% ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், காலதாமதமாக 20% வரையே கொள்முதல் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் நிபந்தனைகளை விதித்துள்ளது. தமிழ்நாடு விவசாயி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற நிலையிலேயே உள்ளது. முயற்சியை மேற்கொண்ட முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா மார்ச் 4ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை கொடுத்துள்ளோம். ஆளுநர் ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழி ஆளுநருக்கு பொருந்தும். வரும் பிப்ரவரி 28ம் தேதி ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம். வாய்க்கொழுப்பை அடக்காவிட்டால் தமிழ்நாட்டில் நடமாட முடியாத நிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்படுத்தும்.
அண்மைச் செய்தி: ”ஓபிஎஸ் இனி சிங்கப்பாதையை நோக்கி பயணிப்பார்” – ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்
அதிமுக தீர்ப்பை பொறுத்தவரை யாருக்கு சாமர்த்தியமோ அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். இது அவர்களுடைய பிரச்சினை. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி, நாளைக்கு பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார். இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.







