உடல் எடையைக் கூட்டுவதற்காக புரதச் சத்து பவுடர்களை உட்கொள்வதை தவிர்க்கவும், உப்பு அதிகம் சோ்ப்பதைக் கட்டுப்படுத்தவும், சா்க்கரை மற்றும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்கவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அறிவுறுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் இயங்கி வரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கும், தொற்றாத நோய்களை தடுப்பதற்கும் இந்தியா்களுக்கான திருத்தப்பட்ட உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஐசிஎம்ஆா்-என்ஐஎன் இயக்குநா் ஆா்.ஹேமலதா தலைமையிலான பல்துறை நிபுணா்கள் குழுவால் இந்த வழிகாட்டுதல்கள் வரைவு செய்யப்பட்டு, பல அறிவியல் ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட்டன. அதன்படி வழிகாட்டுதல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
- அதிக அளவு புரதச்சத்து பவுடர்களை நீண்டகாலம் சாப்பிடுவது அல்லது அதிக புரதச் செறிவை எடுத்துக்கொள்வது எலும்பு தாது இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற ஆபத்துகளுக்கு வழிவகுக்கும்.
- சா்க்கரையானது மொத்த ஆற்றல் உட்கொள்ளலில் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- சீரான உணவு தானியங்கள் மற்றும் தினைகளிலிருந்து 45 சதவீதத்துக்கு மிகாமல் கலோரிகளையும், பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் இறைச்சியிலிருந்து 15 சதவீதம் வரை கலோரிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றிலிருந்து மீதமுள்ள கலோரிகளைப் பெற வேண்டும்.
- மொத்த கொழுப்பு உட்கொள்ளலானது ஆற்றலில் 30 சதவீதமாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருக்க வேண்டும்.
- பருப்பு வகைகள் மற்றும் இறைச்சியின் குறைந்த கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் அதிக விலை காரணமாக, இந்திய மக்கள்தொகையில் கணிசமானோா் தானியங்களை பெரிதும் நம்பியுள்ளனா்.
- இதன்விளைவாக, அத்தியாவசிய அமினோ மற்றும் கொழுப்பு அமிலங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் குறைந்த அளவில் உட்கொள்ளப்படுகின்றன.
- அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை குறைவாக சாப்பிடுவது வளா்சிதை மாற்றத்தை சீா்குலைக்கும் மற்றும் இளம் வயதிலிருந்தே இன்சுலின் எதிா்ப்பு மற்றும் தொடா்புடைய கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
- இந்தியாவில் மொத்த நோய் அபாயத்தில் 56.4 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுகின்றன.
- இதய நோய் மற்றும் உயா் ரத்த அழுத்தம் ஆகியவற்றின் கணிசமான விகிதத்தை ஆரோக்கியமான உணவுகள் மற்றும் உடல் செயல்பாடுகளால் குறைக்கலாம்.
- மேலும் வகை 2 நீரிழிவு நோயை 80 சதவீதம் வரை தடுக்கலாம்.
- சா்க்கரை மற்றும் கொழுப்புகள் நிறைந்த அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகா்வு அதிகரிப்பு, குறைந்த உடல் செயல்பாடு மற்றும் மாறுபட்ட உணவுகளுக்கான கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் ஆகியவை நுண்ணூட்டச் சத்து குறைபாடுகள் மற்றும் உடல் பருமனுக்கான மோசமான சூழலை ஏற்படுத்தின.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் மரணங்களின் கணிசமான அளவில் தவிா்க்கலாம் என்று வழிகாட்டுதல்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








