புயல் எச்சரிக்கைகளை முன்கூட்டியே கண்டறிய AI தொழில்நுட்பம் – மத்திய அரசு தகவல்….!

புயல் எச்சரிக்கைகளை முன்கூட்டியே மிகத் துல்லியமாகக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் வானிலை முன்னறிவிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது ;

புயல்களின் தீவிரத்தைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு  மற்றும் இயந்திரக் கற்றல் அடிப்படையிலான ‘Advanced Dvorak Technique’ (AiDT) பயன்படுத்தப்படுகிறது. Arunika’ சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் Pangu, GraphCast போன்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறுகிய காலத்தில் கனமழை மற்றும் வெப்ப அலைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட பகுதிகளில் மழைப்பொழிவை துல்லியத்துடன் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது.

பாஷினி AI கருவி மூலம் வானிலை தகவல்கள் விவசாயிகளுக்கு அவர்களின் தாய்மொழியிலேயே உடனுக்குடன் கொண்டு செல்லப்படுகின்றன. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் இணைந்து, இந்தியாவின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு வழங்கப்படுகிறது. இதனை ‘e-Gramswaraj’ மற்றும் ‘Mausamgram’ இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

‘மேக்தூத்’ மற்றும் ‘மவுசம்’ போன்ற மொபைல் செயலிகள் மூலம் 1.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் நேரடி வானிலை தகவல்களைப் பெற்று வருகின்றனர்.

இந்த நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் பயிர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்த முடிவுகளைச் சரியான நேரத்தில் எடுக்க முடிகிறது. இது பயிர் சேதத்தைக் குறைப்பதுடன், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் பெரிதும் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.