ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து 14-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூர் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இரு தலைவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலின் போது ஈரானில் அதிகரித்துள்ள பதற்றங்கள், பொதுமக்கள் உயிரிழப்பு, பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள கடும் சேதம் உள்ளிட்டவை குறித்து கவலையை இரு தலைவர்களும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
மேலும் இரு தரப்பில் நடைபெற்ற உரையாடலில் இந்திய குடிமக்களின் பாதுகாப்பு, ஏற்றுமதி, தடையற்ற எரிசக்தி போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த மோதலை அமைதியான வழியில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும், ராஜாங்க ரீதியிலான பேச்சு வார்த்தைகளை மூலம் பிரச்சனைகளை தீர்க்கும் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்க படைகள் இடையே மோதல் தொடங்கிய பிறகு வளைகுடாவில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கடந்த சில நாட்களகவே உரையாற்றி வந்த நிலையில், முதல் முறையாக ஈரான் அதிபரோடு இன்று தொலைபேசியில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







