இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சொத்துவரி குறைவாக உள்ளது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 600 சதுர அடிக்கும் குறைவாக உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் கே.என்.நேரு இதற்கு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நெரு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிக சொத்து இருப்பவர்களுக்கே அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழைகளை பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்தியாவில் உள்ள பல நகரங்களில் சென்னை, கோவையை விட 100 சதவீதத்திற்கு மேல் அதிக வரி வசூலிக்கப்படுவதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் தான் சொத்து வரி குறைவாக உள்ளதாக தெரிவித்தார். கடந்த 24 ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாததை சுட்டிக்காட்டிய அமைச்சர் கே.என்.நேரு, சொத்து வரியை மாற்றி அமைத்தால் தான் உள்ளாட்சி நிதி விடுவிக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியதால் தான் வரி உயர்த்தப்பட்டதாக விளக்கம் அளித்தார்.
Advertisement: