சொத்து பிரச்னை; முன்னாள் திமுக எம்பி மஸ்தான் கொலை வழக்கில் சகோதரர் கைது

சென்னை அருகே முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் ஆறாவது குற்றவாளியாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துக்காக அண்ணனை மருமகனை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…

சென்னை அருகே முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கில் ஆறாவது குற்றவாளியாக அவரது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துக்காக அண்ணனை மருமகனை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர் (வயது 66). இவர் அதிமுகவில் கடந்த 1995 முதல் 2001 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வந்தார். இதனிடையே அதிமுகவில் இருந்து விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார்.

இவர் கடந்த 21ம் தேதி அவரது வீட்டில் இருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். இவரது காரை அவரது தம்பி மருமகனான இம்ரான் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே வந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி, கூடுவாஞ்சேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தனது அப்பாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநவாஷ் கடந்த 22ம் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கொலை நடந்திருப்பதாக தெரியவந்தது.இதனால் மஸ்தானின் கார் ஓட்டுநர் இம்ரான் பாஷா, தமீம்சுல்தான், நசீர், தாப்பிக் அகமது உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரனை நடத்தியத்தில் 15 லட்சம் பணத்திற்காக கொலை செய்து விட்டதாக இம்ரான் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மேலும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்ரான் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது இம்ரான் அவரது மாமனார் மற்றும் மஸ்தான் அவரின் தம்பியான ஆதம் பாஷாவுடன் கொலை செய்வதற்கு முன்பு அதிகளவில் செல்போனில் உரையாடியது தெரியவந்தது.

இந்நிலையில் மஸ்தானின் சகோதரர் ஆதாம் பாஷாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் ஆதம் பாஷாவிற்கும், அவரது சகோதரர் மஸ்தானுக்கும் இடையே பிரச்னை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆதம் பாஷாவிற்கு மஸ்தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை அவர் திருப்பி கேட்டதாலும், குடும்ப சொத்தான வீட்டை தனது மாமனாருக்கு எழுதி கொடுக்க தடையாக இருந்ததாலும், தனது மாமனாருடன் சேர்ந்து மஸ்தானை கொலை செய்ய திட்டம் போட்டு தனது அண்ணனை கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே இந்த கொலை வழக்கில் 6வது குற்றவாளியாக ஆதம்பாஷாவை கைது செய்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.