“மாணவியர் விடுதிகளில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!

பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“சென்னையில், அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படிக்கும் 13 வயது மாணவி, விடுதி காவலாளியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதுமே, பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் வழக்குகள், திமுக அரசால் பொறுப்பின்றி கையாளப்படுவதன் விளைவு, சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் சிறிதும் பயமில்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு குற்றம் நடைபெற்ற பிறகும், குற்றவாளியைப் பிடித்து விட்டோம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் திமுக அரசு, குற்றம் நடக்காமல் தடுப்பதுதான் அரசின் முதல் கடமை என்பதை மறந்து போய்விட்டது.

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள மாணவியர் விடுதிகளில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.