தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி, சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
மேலும், பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் வாங்கிக் கொள்ள விரைவில் எடுக்கப்படும் எனவும் கூறிய அவர், தற்போது பரிசோதனை முயற்சியாக, நகர் புறத்தில் ஒரு கடையிலும், கிராமப்புறத்தில் ஒரு கடையிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதற்கான டெண்டர் விடப்பட்டு, தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளிலும் கருவிழி மூலம் பொருட்களை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதுவரை பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து , பொருள்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.








