கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, அங்கு சிகிச்சை பெற்ற ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கோவை தென்னமநல்லூர் பகுதியில் வசித்து வரும் கவிதா என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கோயம்புத்தூர் – திருச்சி சாலையிலுள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் இரண்டரை லட்சம் ரூபாய் கட்டினால் போதும் என தெரிவித்ததாகவும், இதனையடுத்து மொத்த பணத்தையும் கவிதா செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அந்த மருத்துவமனையில் 9 நாட்களாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், அப்பெண்ணை டிஸ்சார்ஜ் செய்ய மேலும் மூன்றரை லட்சம் கட்ட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காதாரத்துறை இயக்குநர் மற்றும் கொரோனா தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பெண்ணின் மகள் கோமதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கும் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.







