கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த வரும் 21-ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் மோடியின் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடியின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.
கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு தங்களுடைய முந்தைய நிலைப்பாட்டை மாற்றி இருப்பதைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான நிர்வாக உரிமைகளை மாநில அரசுகளுக்கு வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பைக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகிக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் என கொரோனா நோய்த் தொற்றின் நெருக்கடியான காலகட்டத்தில் அறிவித்திருப்பது இந்நேரத்தில் மிகவும் பொருத்தமான பதிலாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் உள்ளிட்ட பல்வேறு முதலமைச்சர்களும் பிரதமரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.







