கோவையில் கொரோனா பரவல் 60 சதவீதம் வரை குறைந்திருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான கே.என். நேரு நேற்று கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா தொற்று நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனையும் மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கோவையில் தற்போது 60 சதவீதம் வரை கொரோனா பரவல் குறைந்துள்ளதாக கூறினார். தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டதாக கூறிய அவர், தடுப்பூசி கிடைத்தவுடன் கிராமப்புறங்களில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சைக்காகவும் பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.







