பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி ஆதரித்து பேசுவது, பணவீக்கம், வேலையின்மை, மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது உள்ளிட்டவைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நேற்று நடைபெற்ற பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசினார். எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த சட்டத்தை எதிர்ப்பதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டத்தை முன்மொழியும் போது, ஒரு நாட்டையே, ஒரு குடும்பத்தோடு ஒப்பிட்டு பேசுகிறார்; அவரது ஒப்பீடு சரியாகத் தோன்றினாலும், யதார்த்தம் மிகவும் மாறுபட்டது. ஒரு குடும்பம் இரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஒரு நாடு ஒன்றிணைக்கப்படுகிறது.
குடும்பத்திலும் கூட பன்முகத்தன்மை உள்ளது. நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டமானது, இந்திய மக்களிடையே காணப்படும் பன்முகத்தன்மையை அங்கீகரித்துள்ளது. பொது சிவில் சட்டம், மக்களால் விரும்பப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதனை அரசாங்கத்தால் மக்களிடம் திணிக்க முடியாது.
பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தை எளிமையான ஒன்றாக காட்சிப்படுத்துகிறார். ஆனால் அது சாத்தியமற்றது என்பதை அவர் கடந்த சட்ட ஆணையத்தின் அறிக்கையை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். பாஜகவின் சொல்லாலும் செயலாலும் இன்று இந்திய நாடு பிளவுபட்டுள்ளது. மக்கள் மீது திணிக்கப்படும் இந்த பொது சிவில் சட்டத்தால், மேலும் மேலும் பிளவுகள் ஏற்படும்.
https://twitter.com/pchidambaram_in/status/1673884521991753736?s=46
பொது சிவில் சட்டத்தை பிரதமர் மோடி ஆதரித்து பேசுவது, பணவீக்கம், வேலையின்மை, மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது உள்ளிட்டவைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல்; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நல்லாட்சியில் தோல்வியடைந்ததால், அடுத்த தேர்தல்களில் வெற்றி பெற பொது சிவில் சட்டத்தை பாஜக களமிறக்குகிறது.”
இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.








