பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கோலி கையொப்பமிட்ட பேட் பரிசு!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பரிசளித்தார். தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். இந்த…

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பரிசளித்தார்.

தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இந்த பண்டிகை இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் வசிக்கும் இந்துக்களால் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில்,  தீபாவளி பண்டிகையையொட்டி,  இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இங்கிலாந்து நாட்டில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்,  தனது மனைவி கியோகோ ஜெய்சங்கருடன் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்‌ஷதா மூர்த்தியை சந்தித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்ட பேட் மற்றும் விநாயகர் சிலையை ரிஷி சுனக்கிற்கு ஜெய்சங்கர் பரிசளித்தார். ரிஷி சுனக் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது:

“தீபாவளி தினத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அழைத்ததில் மகிழ்ச்சி. பிரதமர் நரேந்திர மோடியின் தீபாவளி வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தேன்.  இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகள் தங்கள் சமகால நட்புறவை மறுவடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவியின் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி.”

இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது X தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.