பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை!

மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வர உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். கேரளாவில் இருந்து மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் நரேந்திர மோடி மதியம் 2.15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்கிறார். பின்னர், பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். மாலை 3.10 மணிக்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி உரையை நிறைவு செய்து மாலை 4.15 மணிக்கு மீண்டும் டெல்லி செல்கிறார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.