தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழ் நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுகான முதல் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி கூடியது. அரசியலமைப்பின் படி ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும். ஆனால் தமிழ் நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சட்டமன்றத்தில் தேசிய கீதம் வாசிக்கவில்லை என்று குற்றம் சாட்டி அவையில் இருந்து வெளியானார்.
அதே நாளில் கேரள ஆளுநரான ராஜேந்திர அர்லேகரும் அமைச்சரவை அங்கீகரித்த உரையின் சில பகுதிகளை, குறிப்பாக மத்திய அரசை விமர்சிக்கும் பகுதிகளை தவிர்த்துவிட்டு வாசித்ததாக குற்ற சாட்டுப் எழுந்தது. இந்த நிலையில் இன்று கர்நாடக சட்டமன்ற கூட்ட தொடரில் அம்மாநில ஆளுநரான தாவர்சந்த் கெலாடும் தனது உரையை வாசிக்காமல் வெளி நடப்பு செய்துள்ளார். இதனால் கர்நாடக சட்ட மன்றத்தில் அமளி நிலவியது.
இது தொடர்பாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
“முதலில் தமிழ்நாடு, பிறகு கேரளா, இப்போது கர்நாடகா. இந்த முறைமை தெளிவாகவும் திட்டமிட்டபடியும் உள்ளது.
மாநில அரசுகளால் தயாரிக்கப்பட்ட உரையைப் படிக்க ஆளுநர்கள் மறுத்து, கட்சி முகவர்களைப் போல நடந்துகொண்டு, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைப் பலவீனப்படுத்துகின்றனர்.
நான் முன்பே குறிப்பிட்டது போல, ஆண்டுதோறும் நடைபெறும் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இப்போது ஒரே தீர்வு.
திமுக, இந்தியா முழுவதும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து, இந்த வழக்கற்றுப் போன மற்றும் பொருத்தமற்ற நடைமுறையை ஒழிப்பதற்காக, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிக்கும்”
என்று தெரிவித்துள்ளார்.







