சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை…

சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே காணப்பட்ட மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது.

இதனால் ராணுவம், துணை ராணுவத்தினர் ஆங்காங்கே குழுக்கள் குழுக்களாக சண்டையிட்டு வருகின்றனர். தற்போது, ராணுவம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் குறிப்பிடப்படாத எண்ணிக்கையில் இந்தியர்கள் சூடானில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சூடானின் தலைநகர் கார்ட்டூமில் சண்டை அதிகரித்துள்ளதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.இதையடுத்து, சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட குழு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த ஆய்வு கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, சூடானுக்கான இந்திய தூதர் பி.எஸ்.முபாரக் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த ஆலோசனையில் சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்க பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.