மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கர்நாடகாவின் சாம்ராஜ் நகரின் கொள்ளேகாலில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்,
‘தமிழகத்திற்கு காவிரி ஆறு வழியாக, 177 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும் என, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு உள்ளது. அந்த உத்தரவை நாங்கள் கடைபிடிக்கிறோம். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை. இதுகுறித்து மத்திய நீர் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேகதாது அணை திட்டத்திற்கு ஏற்கனவே நாங்கள் சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பி சில கூடுதல் தகவல்களை கேட்டது. தற்போது திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளோம். விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின், உடனடியாக பூமி பூஜை நடக்கும்’ என்று கூறியுள்ளார்.
காவிரியில் நீரைத் தடுத்து, 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 67.14 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு அணையைக் கட்டவும், 400 மெகாவாட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கவும் கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இதை அனுமதித்தால் தமிழகத்தின் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். கடந்த 48 ஆண்டுகளில் 15.87 லட்சம் ஹெக்டேர் நிலம் சாகுபடி பரப்பை நாம் இழந்துள்ளோம்.
ஆனால், கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 9.96 இலட்சம் ஹெக்டேரிலிருந்து 38.25 இலட்சம் ஹெக்டேராக அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பறித்து வரும் கர்நாடகா, மீண்டும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று முனைந்திருப்பதும், திட்டத்தைச் செயற்படுத்த திட்ட அறிக்கையை ஒன்றிய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவோம், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழகத்திற்கு உரிமை இல்லை எனவும் கர்நாடக துணை முதலமைச்சர் குறிப்பிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்தி காவிரி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







