முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர் தான் பிரதமர் – அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு!

திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டுபவர்கள் தான் பிரதமராக வருவார் என ஆதிதிராவிடர் நலக்குழு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சரளை பகுதியில் திமுக சார்பில் ‘உரிமைகளை மீட்க…

திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டுபவர்கள் தான் பிரதமராக வருவார் என ஆதிதிராவிடர் நலக்குழு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சரளை பகுதியில் திமுக சார்பில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், திமுக துணை பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் மேடையில் பேசிய ஆதிதிராவிடர் நலக்குழு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:

“இந்திய அளவில் பாஜகவை அடியோட ஓட வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் கைகாட்டுபவர்கள் தான் பிரதமராக வர வேண்டும். திருவள்ளூரை காவி பூசி ஒரு சார்பு நபராக மாற்ற பிரதமர் மோடி நினைக்கிறார். தமிழ் மொழியை நசுக்கி இந்தி, சமஸ்கிருதம் மொழியை மத்திய அரசு வளர்க்க பார்க்கிறது. பிரதமர் திட்டம், தேர்தல் பத்திரம் மூலம் பெறும் நிதியில், பாஜகவினர் மோசடி தான் செய்து வருகின்றனர்.

இந்தியர்கள் வேலைவாய்ப்பின்மை விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் சந்தித்து வருகிறோம். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, இலவச சமையல் எரிவாயு போன்ற திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த நிலையில் தற்போது பாஜக புதிய பெயரில் இந்த திட்டத்தை கொண்டு வருகிறது” இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.