இளைஞர்கள் புதுமையாக தொடங்கும் முயற்சிகளுக்கு பிரதமர் அதிகம் உதவி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஆர்.சி நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி அரங்கில், இலக்கியத்துறையில் வழங்கப்படும் ’சரஸ்வதி சம்மான் விருது’ பெற்றுள்ள எழுத்தாளர் சிவசங்கரிக்கு, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “எழுத்தாளருக்கு கிடைக்க கூடிய விருது வழங்கும் விழா, பண்டிகை போல கொண்டாட வேண்டிய விஷயம். படிப்பது குறைந்து விட்டது என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அப்படி இல்லை. எழுத்துக்கு இருக்கும் மரியாதை முன்பு போல் இன்றும் உள்ளது. ஆனால் பேப்பரில் படிக்கிறார்களா? இல்லை செல்போனிலா? என்பது தான்.
திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் என கூட்டத்தில் பேசும்போது, அந்த வார்த்தைக்கு உரிய பலமும் சக்தியும் உள்ளது. இன்றும் அந்த எண்ணத்தில் சக்தியும், சிந்தனையும் மதிப்பும் இருக்கத்தான் செய்கிறது. அது பழங்காலம் என்று ஒதுக்கி வைப்பதில்லை. புத்தகத்தை படிக்க படிக்க நம்மை பற்றி நாமே யோசிப்போம். புத்தகம் என்பது ஒரு கண்ணாடி. நம்மை நாமே அதில் பார்க்கிறோம்.
மனிதன் மாறவில்லை. அப்போது உள்ள குணமும் இப்போது உள்ளது. சீர்திருத்தம் வருகிறது. மீண்டும் குற்றம் நடக்கிறது. சிலவற்றை கற்றுக் கொள்கிறோம். சிலவற்றை விட்டு விடுகிறோம். ஆயிரம் மனிதர்கள் ஒன்று போல் இருந்தால், ஒருவர் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று ஒரு எழுத்தாளர் அதை உள்வாங்கி எழுதுகிறார்.
என் மொழியில் நான் ஒரு அதிகாரத்தை பெற்று விட்டேன். அதன் மூலம் மக்கள் மனதில் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்பதும் ஒன்று. நம் மொழியில் எழுதுவது ஒரு விதம். ஒரு எழுத்தாளர் தனது Comfortable Zone-ஐ விட்டு வேறு இடங்களுக்கு சென்று எழுதுவது, ஒரு புதுமையான நல்ல முயற்சி. நான் பிறந்தது மதுரை. திருச்சியில் படித்து உள்ளேன். என் அம்மா எந்த ஊருக்கு சென்றாலும் நூலகத்தை எங்கு இருக்கிறது என்று பார்த்து புத்தகத்தை எடுத்து வந்து படிப்பார். அதன் மூலம் நானும் பல விதமான புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைத்தது.
எனக்கு தனிப்பட்ட முறையில் சுயசரிதை என்பது மிகுந்த இஷ்டம். இன்னொருவரை பற்றி தெரிந்து கொண்டு சுயசரிதை எழுதுவது சிறப்பானது. இளைஞர்கள் புதுமையாக தொடங்கும் முயற்சிகளுக்கு பிரதமர் அதிகம் உதவி வருகிறார். தமிழ்நாட்டில் வாழ்ந்த ஜி.டி.நாயுடு தான் அனைவரையும் விட அதிகம் புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்டு வந்தவர்.
நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான கருத்தாக, நம்முடைய எழுத்து இருக்க வேண்டும். மனிதனை மனிதன் வெறுக்கும் அளவுக்கு எழுத்து இருக்க கூடாது. கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொன்னதை தான், பிரதமர் பின்பற்றி வருகிறார். சிறியோர்களை இகழ்வாக பார்க்க வேண்டாம். பெரியவர்களை பார்த்து பயப்பட வேண்டாம். நடுநிலைமையாக இருங்கள்.
பாரதியின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு அணுகுண்டு போன்றது. மனதில் உத்வேகத்தையும் எழுச்சியும் கொடுக்கும். இன்று குழந்தைகள் பாடிய பாரதி பாடல் எனக்கு அதிக ஆற்றலை அளித்தது. நாடும் மொழியும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று சொன்ன பர்வீன் சுல்தானாவிற்கு பாராட்டுக்கள்” என்று தெரிவித்தார்.