பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை வருகை தரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோரை சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு கோரவுள்ளார் திரௌபதி முர்மு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளார்.
அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர திட்டமிட்டுள்ளார். சென்னை வரும் திரௌபதி முர்மு, பாஜக அலுவலகத்துக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசுத் தலைவர் வேட்பாளரின் சென்னை வருகைக்கான ஏற்பாடுகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பாஜக குழுவின் உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளராக முர்மு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-மணிகண்டன்