முக்கியச் செய்திகள் விளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 184 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.  இதில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி கண்டது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு டிஎன்பிஎல் போட்டியின் முதல் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நெல்லை ராயல் கிங்ஸ், 3 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய 8 அணிகள் இந்த சீசலில் பங்கேற்றுள்ளன.

முதல் ஆட்டம் திருநெல்வேலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில்,  நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் கண்ட நெல்லை ராயல் கிங்ஸ் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக பிரதோஷ் பால் 7 ரன்களிலும் அப்ராஜித் 2 ரன்களிலும் இந்திரஜத் 3 ரன்களிலும்
ஆட்டமிழந்தனர்.

இதனால் தடுமாற்றம் கண்ட நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் துவக்க
ஆட்டக்காரர் சூர்யபிரகாஷ் மற்றும் சஞ்சய் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை
சரிவில் இருந்து மீட்டனர். தொடக்கத்தில் நிதானத்தை கடைப்பிடித்து அவர்கள் ரன்
வேட்டையில் ஈடுபட்டனர். ஏதுவான பந்துகளை பவுண்டரிகள் ஆகவும் சிக்சர்கள் ஆகவும்
விளாசிய நிலையில் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

இருவரும் அரை சதத்தை கடந்த நிலையில் 62 ரன்கள் எடுத்திருந்தபோது சூர்ய பிரகாஷ்
ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து அஜிதேஷ் 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய சஞ்சய் யாதவ் 47 பந்துகளில் 6 சிக்சர்களை 5
பவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 87 ரன்களை குவித்தார். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 184 ரன்களை குவித்தது.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிதானமாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஜோடி 50 ரன்களை
குவித்த நிலையில் ஜெகதீசன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த
ராதாகிருஷ்ணனும் ஒரு ரன்களில் வெளியேற நிதான ஆட்டத்தை சேப்பாக்கம் சூப்பர்
கில்லீஸ் அணி வெளிப்படுத்தியது.

அணியின் ஸ்கோர் மெல்ல உயரத் தொடங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் கௌசிக் காந்தி 43 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் சோனு யாதவ் இருபத்தி மூன்று பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். பரபரப்பான இறுதி ஓவரின் கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்து ஆட்டம் சமனில் முடிந்தது. இறுதிகட்டத்தில் ஹரிஷ் குமார் 12 பந்துகளில் 26 ரன்கள் குவித்து அணிக்கு பக்கபலமாக இருந்தார்.

எனினும் ஆட்டம் சமனில் முடிந்தது. தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்தது. 10 ரன்கள் எடுத்தால் என்ற  வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடிய ஐந்து பந்துகளிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

87 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நெல்லை அணியின் சஞ்சய் யாதவ் ஆட்டநாயகன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிரா: நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

Halley Karthik

புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி

Gayathri Venkatesan

கொரோனாவை எதிர்க்கொண்டு மீண்ட இந்த தலைமுறை எதையும் சாதிக்கும்

Halley Karthik