மயிலாடுதுறை அருகே, நள்ளிரவில் அடிக்கடி மின்தடை- சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மயிலாடுதுறை,  நீடூர் பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி, ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக…

மயிலாடுதுறை,  நீடூர் பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி, ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி
முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்
சாட்டியுள்ளனர். இதுகுறித்து நீடூர் துணை மின் நிலையத்தில் அதிகாரிகளிடம்
கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு உயர் மின்னழுத்தம் காரணமாக மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மின்தடை குறித்து புகார் அளித்தும் பல மணி நேரமாக மின்வாரிய அதிகாரிகள் சீர் செய்து தராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு நள்ளிரவில் மின்சார வாரியத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மின் விநியோகம் கொடுக்கப்பட்ட நிலையில், புதிய மின் மாற்றி அமைத்து தர வேண்டும்; இல்லையெனில் இதுபோன்று தினமும் பழுது ஏற்பட்டு மின் நிறுத்தம் செய்யப்படுவது தொடர் கதையாக அமையும் என தெரிவித்தனர். இதனிடையே காவல்துறையினர் அதிகாரிகளிடம் நேரில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு களைந்து சென்றனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.