சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே, பெண் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி உயிரிழப்பு மிரட்டல் விடுத்ததுடன், உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் கீழே இறங்குவேன், என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜூலா என்ற பெண்ணுக்கும், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த ராஜூலா, தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், திருவேற்காடு பகுதிக்கு வந்த ராஜூலா, கணவரிடம், தமது நகை, பணத்தை திரும்ப கேட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக, தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கணவர் மீது பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், புகாரை வாங்க போலீசார் தாமதப்படுத்தியதால், திடீரென அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி, ராஜூலா உயிரிழப்பு மிரட்டல் விடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் கீழே இறங்குவேன் என்று கூறி பிடிவாதம் பிடித்தார். மேலும், 3 மணி நேரத்திற்கும் மேலாக, செல்போன் கோபுரத்தின் மேலேயே இருந்த ராஜூலா கீழே இறங்கி வர மறுத்தார். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பூவை ரவிக்குமார், அந்த பெண்ணுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, கீழே இறங்கி வரச் செய்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.







