பொன்முடி பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

பொன்முடிக்கு பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தீர்ப்பு…

பொன்முடிக்கு பதவியேற்பு விவகாரம் – ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டது .  இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.  இதனைத் தொடர்ந்து, திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

பொன்முடி எம்.எல்.ஏ.வாகியுள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.  இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.  ஆனால் இந்த கடிதத்துக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் புதிய அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அதில் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டுள்ளது என்பது சம்பந்தமாக விரிவாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன்பிறகு டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பிய நிலையில்,  பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு,  அவசர வழக்காக நாளை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.  இதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.