பூந்தமல்லி அருகே குப்பை வண்டியில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் அனுப்பப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணம் ரூ.1000, அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படவுள்ளன. இந்த பொங்கல் பரிசு தொகுப்புகளைப் பெறுவதற்கான டோக்கன் டிசம்பர் 30 முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும் இந்த பொருட்கள் ஒவ்வொரு நியாய விலைக்கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள நியாய விலைக் கடைக்கு வட்டாட்சியர் செல்வம் தலைமையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் அனுப்பப்பட்டன. இதில் ஒரு சில நியாய விலைக் கடைகளுக்கு மட்டும் பரிசு தொகுப்புகள் குப்பை அள்ளும் டிராக்டர் வண்டியில் அனுப்பப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், வண்டியில் அனுப்பப்பட்டது பொங்கல் பரிசு அல்ல என்றும் வேட்டி, சேலை மட்டுமே வண்டியில் எடுத்து செல்லப்பட்டதாகவும் வட்டாட்சியர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். வேட்டி, சேலை அனுப்பப்பட்ட வாகனம் குப்பை வண்டியா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.







