கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு காவல்துறை நேரில் சம்மன்!

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விகேனேஷ்க்கு காவல்துறை சம்மன் வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவருக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் தகவல் அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து, எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்காததால் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனத் தமிழக அரசு தெரிவித்தது. இதனிடையே, தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது. அதேபோல, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்து, தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (நவ. 25) காலை எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டுக்கு வந்த ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட காவல்துறையினர், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகும்படி அருள் விக்னேஷிடம் ஆய்வாளர் புவனேஸ்வரி சம்மனை நேரில் வழங்கினார்.

காவல்துறையினர் ஆதாரங்களைத் திரட்டி வரும் நிலையில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில், கட்சித் தலைமை மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.