தேவாரம் ஓத உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோவிலில் காவல் துறையினர் பாதுகாப்பு

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் திருமுறை ஓதுவதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்கு 60க்கும் மேற்பட்ட…

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் திருமுறை
ஓதுவதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து சட்டம்-
ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்கு 60க்கும் மேற்பட்ட போலீசார்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த மே மாதம் 17ம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில் கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடவும், தேவாரம், திருவாசகம் பாடவும் உத்தரவிட்டிருந்தது. இதற்கு
தீட்சிதர்கள் தரப்பில் கடுமையான ஆட்சேபணை தெரிவித்து இருந்த சூழ்நிலையில்
வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அரசு ஆணையை செயல்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகளும் கோவில் தீட்சிதர்களும் மாறி மாறி கோவில் நிர்வாகம் தொடர்பாக பதில் விளக்க கடிதங்களை எழுதி வந்தனர். இந்நிலையில், கடந்த மே மாதம் கோவில் கணக்கு வழக்குகளை இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் கேட்டிருந்தனர். இதற்கு தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள்
நிர்வகித்து வருவதாகும் எனவே கணக்கு வழக்குகளை காண்பிக்க மறுத்தனர்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கோவில் நிர்வாகம் தொடர்பான புகார்களை மாவட்ட இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என பத்திரிகைகளில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விளம்பரம் செய்திருந்தனர். நேற்று மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்து இருந்த சூழ்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை என தமிழ் தேசிய பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகள் புகார்களை மனுக்களை கொடுத்தனர்.

இதனை அடுத்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், சிதம்பரம் நடராஜர் கோவில் செயலாளர் மற்றும் மாவட்ட இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை துணை ஆணையருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் தேவாரம்,
திருவாசகம் திருமுறைகளை ஓதி வழிபட தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதாக பல்வேறு
அமைப்புகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளது. எனவே அரசாணையில்
குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு கால பூஜை முடிந்த பின்பும் முதல் 30 நிமிட
நேரத்திற்கு தேவார, திருவாசக திருமுறைகள் ஓதி வழிபட திருக்கோயில் நிர்வாகத்தை
அணுகும் பக்தர்களை அரசாணையின்படி அனுமதிக்க வேண்டும் என திருக்கோயில்
நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் தேவார, திருவாசக திருமுறைகளை ஓதி வழிபட விரும்பும் பக்தர்கள்
கோயில் நிர்வாகத்திடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், இதர
பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், திருக்கோயில் அமைதிக்கு குந்தகம்
விளைவிக்காமலும் தேவார, திருவாசக திருமுறைகளை ஓதி வழிபட வேண்டும் என
அறிவுறுத்தப்படுகிறது இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தார்

இதனையடுத்து இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் சட்ட ஒழுங்கு பிரச்சனை
ஏற்படாதவாறு கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.