சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அறநிலையத்துறை விசாரணை குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்ட நிலையில், தீட்சிதர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற பொது புகார் மனுக்கள் குறித்தும், கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலை நேரடியாக ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைய துறை சார்பில் விசாரணை குழுவை நியமித்தது. இந்த குழு இரண்டு தினங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று முதல் நாள் ஆய்வை மேற்கொண்டது. காலை கோயிலுக்கு ஆய்வுக்கு வந்த 6 பேர் கொண்ட குழு தீட்சிதர்களை சந்தித்து விசாரணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கோயில் நிர்வாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என்றும், சட்டப்படி அணுகும்படி தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். குறிப்பாக நேற்று காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று முறை விசாரணைக் குழு கோயில் பொது தீட்சிதர்களிடம் விசாரணைக்கு ஒத்துழைக்க வலியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஆட்சேபனை தெரிவித்து, ஆவணங்களை சமர்ப்பிக்க மறுப்பு தெரிவித்ததால் முதல் நாள் ஆய்வை முடித்து கொண்டு விசாரணை குழுவினர் புறப்பட்டனர்.
இந்த நிலையில் இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்ததால், இரண்டாம் நாளான இன்று விசாரணை குழுவினர் மீண்டும் ஆய்வு செய்ய கோவிலுக்கு சென்றனர். இன்றும் தீட்சிதர்கள் தொடர்ந்து ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இவ்விவகாரம் குறித்து மற்ற அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை விசாரணை குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு சம்பந்தமான அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும், அடுத்தகட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆய்வுக்கு வந்த விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்







