நாகை அருகே காரில் கடத்தி வந்த 400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் 400 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி சென்றவர்களை, போலீசார் சினிமா பாணியில் 15 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று  பிடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்ட…

காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் 400 லிட்டர் எரிசாராயத்தை கடத்தி சென்றவர்களை, போலீசார் சினிமா பாணியில் 15 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று  பிடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கீழ்வேளூர் உதவி ஆய்வாளர் அக்பர் அலி தலைமையிலான போலீசார் திருவாரூர் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஆழியூர் பிரிவு சாலை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்வதற்காக போலீசார் நிறுத்தினர்.

ஆனால் காரில் வந்த நபர்கள் காரை நிறுத்தாமல் நாகை சாலையில் வேகமாக சென்றனர். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மூவரும் தங்களது மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு, சினிமா பாணியில் 15 கிலோ மீட்டர் விரட்டி சென்று,  பின் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பரவை தனியார் விடுதி முன்பு காரை மடக்கினர் .

ஆனால் காரில் வந்தவர்கள் இருவரும் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து போலீசார் அந்த காரை சோதனை செய்த போது 8 பிளாஸ்டிக் கேன்களில் 400 லிட்டர் பாண்டிச்சேரி எரி சாராயம் இருப்பதும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகைக்கு கடத்தியதும் தெரிய வந்தது.

மேலும் கீழ்வேளூர் போலீசார் 400 லிட்டர் எரிசாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்து, காரில் சாராயம் கடத்தி தப்பியோடிய இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

—ரூபி.கா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.