லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை கையும், களவுமாக கைது செய்யும்போது, அவர் லஞ்சப்பணத்தை தனது வாயில் போட்டு விழுங்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் பரீதாபா நகரை சேர்ந்தவர் ஷம்புநாத். இவரது எருமை மாடு சமீபத்தில் திருடு போனது. உடனே பரிதாபாத் போலீசில் புகார் செய்ய சென்றார். அப்போது பணியில் இருந்த எஸ்.ஐ., மகேந்திர உலா, மாட்டை கண்டுபிடித்து தர வேண்டுமானால், 10 ஆயிரம் ரூபாயை தனக்கு லஞ்சமாக தர வேண்டும்’ என கேட்டுள்ளார். வேறு வழியில்லாமல் பணம் தருவதாக ஷம்புநாத்தும் சம்மதித்துள்ளார். முதல் தவணையாக ரூ.6 ஆயிரம் கொடுத்துள்ளார். பல நாட்களாகியும் திருடுபோன மாட்டை கண்டுபிடித்து தரவில்லை. இந்நிலையில் மாட்டை கண்டுபிடித்து தரும்படி கேட்க காவல் நிலையத்திற்கு ஷம்புநாத் சென்றுள்ளார். ஆனால் மாடு கிடைக்காத நிலையிலும் மீதி ரூ.4 ஆயிரத்தை தரவேண்டும் என எஸ்ஐ மகேந்திர உலா கேட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் ஷம்புநாத், மனமுடைந்தார். மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். ஏற்கனவே எஸ்ஐ மகேந்திர உலா மீது ஏராளமான புகார்கள் வந்துள்ளது. அதனால் அவரை பொறி வைத்து பிடிக்க லஞ்ச ஒழிப்பு துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று ரசாயன பவுடர் தடவிய பணம் ரூ.4 ஆயிரத்தை ஷம்புநாத்திடம் கொடுத்தனுப்பினார்.
காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள சாலையில் வைத்து ஷம்புநாத்திடம் பணத்தை எஸ்.ஐ. மகேந்திர உலா வாங்கிய போது, மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்பு துறை போலீசிடம் தன்னை ஷம்புநாத் மாட்டிவிட்டுவிட்டதை அறிந்த மகேந்திர உலா பதற்ற மானார்.உடனே கையில் வாங்கிய , லஞ்ச பணமான ரூ.4 ஆயிரத்தையும் மகேந்திர உலா அப்படியே தனது வாயில் திணித்து விழுங்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சியடைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுதாரித்துக்கொண்டு மகேந்திர உலாவின் தொண்டைக்குள் கையை விட்டு பணத்தை எடுக்க முயற்சித்தனர். ஆனால் பணத்தை எடுக்கவிடாமல் மகேந்திர உலா போராடினார். ஒருகட்டத்தில் அவரது கழுத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அழுத்திப்பிடித்து பணத்தை வாயில் இருந்து மீட்டனர். பின்னர் அவரை கைது செய்தனர். இதனிடையே போலீஸ் எஸ்.ஐ. மகேந்திர உலா பணத்தை விழுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.