வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் நடிகை சனம் ஷெட்டிக்கு தொடர்ச்சியாக ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் படங்கள் அனுப்பிய கல்லூரி மாணவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் நடித்து வருபவர் நடிகை சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்தார். இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி, அவரது வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் நேற்று புகார் அளித்தார். மேலும் ஆபாசக் குறுஞ்செய்திகள் வந்த வாட்ஸ் அப் எண்ணையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், இதர ஆதாரங்களையும் வழங்கினார்.

இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ் அப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியது திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ராய் என்ற மாணவனை சென்னை அழைத்து வந்த அடையாறு சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







